You are not connected. Please login or register

Post-#17/5/2014, 7:11 pm

Aditya Sundar

JOIN TODAY

வரலாற்று சிறப்பு மிகுந்த வெற்றியை தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்: ஜெயலலிதா Empty வரலாற்று சிறப்பு மிகுந்த வெற்றியை தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்: ஜெயலலிதா


சென்னை: முல்லைப் பெரியாறு அணை வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மூலம் தமிழகத்திற்கு நியாயம் வழங்கப்பட்டு இருக்கிறது என்றும், தமிழகத்தின் உரிமை நிலை நாட்டப்பட்டு இருக்கிறது என்றும் முதல்வர் ஜெயலலிதா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த வெற்றியை தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:

"காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்ததில் வெற்றி; நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகள் தனியாருக்கு தாரைவார்ப்பதை தடுத்ததில் வெற்றி என்ற வரிசையில்; இன்று முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தின் மூலம் தமிழகத்திற்கு நியாயம் வழங்கப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தின் உரிமை நிலை நாட்டப்பட்டு இருக்கிறது என்ற இனிப்பான வெற்றிச் செய்தி என்னை எல்லையில்லா மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட மக்களின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரள மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன.

இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, எனது ஆட்சிக் காலத்தில், தமிழக அரசின் சார்பில் எடுத்து வைக்கப்பட்ட வலுவான வாதங்களையடுத்து, தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணையின் அன்றைய நீர்மட்டமான 136 அடியிலிருந்து முதற்கட்டமாக 142 அடிக்கு நீரை தேக்கி வைத்து கொள்ளலாம் எனவும்; அணையினை பலப்படுத்தும் பணியினை மேற்கொள்ளலாம் எனவும்; இப்பணிகளை மேற்கொள்வதற்கு தமிழக அரசிற்கு கேரள அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் 27.2.2006 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும், பலப்படுத்தும் பணிகள் மத்திய நீர்வளக் குழுமத்தினர் கூறியபடி முடிக்கப்பட்ட உடன், தனிப்பட்ட நிபுணர்கள் மேற்கொண்டு ஆய்வு நடத்தி, அணையின் நீர்மட்டத்தை உச்சமட்ட நீரளவான 152 அடிக்கு உயர்த்துவது குறித்து முடிவு செய்வார்கள் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்புரை வழங்கியது.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினை முற்றிலும் அவமதிக்கும் வகையில், 2006-ல், 2003 ஆம் ஆண்டைய கேரள நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள பாதுகாப்பு சட்டத்தில் கேரள அரசு திருத்தங்களை கொண்டு வந்தது. இந்தத் திருத்தச் சட்டத்தில் முல்லைப் பெரியாறு அணையின் உச்சமட்ட நீர் அளவு 136 அடி என நிர்ணயம் செய்யப்பட்டது. கேரள அரசின் இந்தச் சட்டத் திருத்தம் அரசியல் சாசனத்திற்கு முரணானது; இந்தச் சட்டம் செல்லத்தக்கதல்ல என உத்தரவிடக் கோரி 31.3.2006 அன்று உச்ச நீதிமன்றத்தில் எனது தலைமையிலான அரசால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில், தமிழக அரசின் வாதங்களையும், கேரள அரசின் வாதங்களையும் கேட்டறிந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான ஐந்து நீதியரசர்கள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, 7.5.2014 அன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பு "தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்"" என்பதற்கேற்ப அமைந்துள்ளது.

இந்த தீர்ப்பில் தமிழ்நாட்டின் உரிமை மற்றும் எனது தலைமையிலான அரசு எடுத்த முடிவுகள் அனைத்தும் நிலைநாட்டப்பட்டுள்ளன. இந்த தீர்ப்பில் தமிழ்நாடு தாக்கல் செய்த சிவில் வழக்கு தீர்ப்பாணை ஆக்கப்பட்டுள்ளது.

கேரள அரசின், கேரள பாசன மற்றும் நீர்ப்பாதுகாப்பு (திருத்தச்) சட்டம், 2006, அரசமைப்பு சட்டத்திற்கு முரணானது என்று உத்தரவிடப்பட்டுள்ளதோடு, பிப்ரவரி 2006-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரையில் உயர்த்திக் கொள்ளலாம் என்ற தீர்ப்பிற்கு கேரள அரசு குறுக்கீடு ஏதும் செய்யக் கூடாது என்றும்; அந்தத் தீர்ப்பில் குறிப்பிட்டவாறு தமிழ்நாடு அரசு பராமரிப்பு பணி மற்றும் வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், கேரள அரசின் அச்சங்களில் உண்மை ஏதுமில்லை என்றாலும், மத்திய நீர்வளக் குழுமம், தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் சார்பில் நியமிக்கப்படும் மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழு அணையின் நீர்மட்டத்தை 142 அடி அளவுக்கு உயர்த்தப்படுவதை மேற்பார்வையிட வேண்டும் என்றும் இந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பின் வாயிலாக தென் தமிழக மாவட்டங்களைச் சார்ந்த விவசாயிகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் நிலைநாட்டப்பட்டு உள்ளது. வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச் சேரும், அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் தமிழக மக்களை சேரும் என்று தெரிவித்து, வரலாற்று சிறப்பு மிகுந்த இந்த வெற்றியை தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

View previous topic View next topic Back to top  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum